Thursday, May 20, 2010

எழுத்து மாற்றம் - என் கருத்தோட்டம்


எழுத்து மாற்றம் - என் கருத்தோட்டம்

செந்தமிழ் தழைக்குமா?அன்புள்ள தமிழ் மக்களே!குழந்தையார் முன்வைக்கும் தமிழ் வரிவடிவ மாற்றத்தால் தமிழ் தழைக்குமா? வாழுமா?ஆங்கிலம் கற்றதால் பேரறிவு பெற்றுவிட்டோம் என்று நினைத்துக் கொண்டு, தமிழை முழுதும் ஆய்ந்த பழுத்த தமிழ் புலவர் பெருமக்களை கிணற்றுத் தவளைகள் என்று பழிக்கும் சில ‘ஆங்கில அறவாளிகள்’ உலகின் செம்மையான வரிவடிவத்தையும் ஒலி வடிவத்தையும் கொண்டுள்ள நம் செந்தமிழை குலைக்க எழுத்துச் சீர்மை வேண்டுமென்று குழறுபடி மிக்கக் கொள்கையை முன்மொழிகிறார்கள். இவர்கள் தாங்கள் புலமை பெற்றுள்ள துறையில் தமிழுக்காக ஆக்கப்பணியில் ஈடுபடலாம் அன்றோ?இவர்களின் இம்முயற்சி வெற்றிப் பெற்றால், தமிழாகிய அமிழ்தம் சீரிழந்து சிறப்பிழந்து அழிவதோடு, நம் மொழியோடு நம் பண்பாடு, கலைச் செல்வங்கள் எல்லாம் மறைந்தொழியுமன்றோ? தமிழ் சீர்மைக் கெடுக்க நினைக்கும் கிறுக்கர்கள் வழி செல்லாது தமிழறிஞர் வழி நின்று தமிழைக் காப்போம்! வளர்ப்போம்!எழுத்துச் சீர்மை குறித்த என் கருத்தோட்டம் வருமாறு:இன்று தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையாது தேவைப்படுவது தமிழை ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும், நீதிமன்ற மொழியாகவும் முழுமையாக ஆளுமைப் படுத்துவதேயன்றி, எழுத்துச் சீர்மையன்று. சீர்மை வேண்டுவோர் முன்பெல்லாம் தட்டச்சையும் கணிப்பொறியையும் காட்டி அவற்றை தமிழில் இயக்குவது அரிது என்றும் இடர்பாடு மிக்கது என்றும் கூறிவந்தனர். இன்றோ கணிப்பொறியிலும் கைப்பேசியிலும் தமிழை இனிதே பயன்படுத்துகிறோம். கணிப்பொறி அறிவியல் விண்ணைத் தொட்டுவிட்டது. கணிப்பொறியில் தமிழையும் பிற மொழிகளையும் ஒலி ஒளி வடிவில் எளிதில் செலுத்தி பயன்படுத்தும் வழி பிறந்துள்ளது. (விசைப் பலகை (வeதீணுலிழிrd)யின்றி, எழுதுகோல் கொண்டு சிலேட்டில் அல்லது தாளில் இயல்பாக எழுதுவது போல் கணிப்பொறி திரையில் இப்போதுள்ள நம் தமிழ் எழுத்துகளைக் கொண்டு எழுதி கணிப்பொறியில் பதிவு செய்ய முடியும்).

இப்போது இக்கூற்றை விட்டுவிட்டு தமிழை தங்களால் தான் காப்பாற்ற முடியும் என்று நினைக்கும் ‘அறிஞர்கள்’, இன்றைய தமிழ் வரிவடிவம், நம் குழந்தைகள் தமிழைக் கற்பதற்கு தடையாகவும் தொல்லையாகவும் இருப்பதாக, மற்றொரு பொய்யான கரணியத்தை முன் வைத்து எழுத்து சீர்மை வேண்டும் என்கின்றனர். தமிழல்லாத கன்னடம், தெலுங்கு, மலையாளம் மற்றும் பிற இந்திய மொழிகளின் வரிவடிவம், ஒலிவடிவம் தமிழை விட இரண்டு மூன்று மடங்கு கூடுதலாக இருக்கின்றன. அம்மொழியாளர்கள் தத்தம் தாய் மொழியை விட்டுவிட்டார்களா? ஆங்கில வரிவடிவத்தை பயன்படுத்த முற்பட்டுள்ளனரா?இவர்கள் கூறும் இக்கரணியம் பொருந்தாது என்பதனை தமிழ் பெற்றோராகிய நாம் நன்கு அறிவோம். நானும் அறிவேன்.

என் பிள்ளைகளுக்கு தாய் மொழி சீனம். தந்தை மொழி தமிழ். அவர்கள் எவ்வித சிக்கலும் இல்லாமல் தமிழைப் படித்தார்கள். என் தலைமகளுக்கு தமிழ் அரிச்சுவடியைச் சொல்லிக் கொடுத்த போதே மற்ற இரு பிள்ளைகளும் தானாகவே கற்றுக் கொண்டார்கள். மேல்நிலை 12 ஆம் வகுப்பு வரை தமிழைப் படித்து நல்ல தேர்ச்சியும் பெற்றார்கள்.இங்கே நாம் மற்றொன்றையும் எண்ணிப் பார்க்க வேண்டும்.தமிழ் அரிச்சுவடியை ஒரு சில நாள்களில் கற்று, எழுத்துக் கூட்டி, தமிழ் நாளிதழையோ நூலையோ படிக்க இயலும். சீன மொழியைத் தாய் மொழியாக கொண்ட ஒருவர் சீன நாளிதழையோ நூலையோ படிப்பதற்கு குறைந்தது இரண்டாயிரம் வரிவடிவங்களை மனஞ் செய்திருக்க வேண்டும். இது போல் ஆங்கில அரிச்சுவடியை கற்ற பின் எழுத்துக் கூட்டி ஆங்கில நாளிதழையோ நூலையோ படித்தல் இயலாது என்பது நாடறிந்த உண்மை.இது இப்படியிருக்க தமிழை கற்றல் கற்பித்தல் கடினம், கடினம் என்று பிதற்றுவது முறையாகுமோ?எழுத்து சுருக்கமோ வரி வடிவ மாற்றமோ நம் மொழியை வாழ வைக்காது. மாறாக சீர்குலையச் செய்து விடும்.

முன்மொழியப்படும் எழுத்துத் திருத்தத்தைக் கடைப்பிடித்தால் வரும் சிக்கல்கள்: (1) இந்த மடலை திருத்திய வரிவடிவத்தைக் கொண்டு அச்சிட்டால் இம்மடல் ஒன்றரை மடங்குக்கு மேல் கூடுதலான பக்கங்களாக விரிவடையும். இதனால் பணச்செலவு கூடுமன்றோ? (2) இப்போதுள்ள வரிவடிவங்களான ரு,து,பு,கூ,தூ, பூ,ரூ போன்றவற்றை நீக்கி, புதிய வரிவடிவத்தை எழுத, அச்சடிக்க கால நேரம் கூடுமன்றோ?

மொழி வாழ வளர வேண்டுமென்றால் அது பேச்சு மொழியாகவும் மக்கள் வழக்கு மொழியாகவும் இருக்க வேண்டும். தமிழை வாழ வைக்க தமிழ் ஆட்சி மொழியாகவும் பயிற்று மொழியாகவும் வழிபாட்டு மொழியாகவும் முதலில் நிலை நாட்ட வேண்டும்.தமிழ் வளர்ச்சிக்கு இன்றியமையா முதன்மைப் பணிகள் பல உள. அவற்றில் ஒன்று தமிழ் சொல்வளத்தை பெருக்குதல். பிற திராவிட மொழிகளிலுள்ள தென்மொழிச் சொற்களை மீட்டு பயன்படுத்துதல். புதிய சொல்லாக்கத்தை ஊக்குவித்தல். இவற்றால்தான் தமிழ் நல்ல வளர்ச்சி பெருமேயயாழிய, தமிழ் வடிவ மாற்றத்தால் அன்று.அதன் பின் எழுத்து சீர்மை வேண்டின் தமிழறிஞர்கள் மொழி நூல் வல்லார்கள், கணிப்பொறி வல்லார்கள் ஒன்று கூடி முடிவு செய்யலாம்.

வாழ்க தமிழ்!
அன்பன்
வெ.கரு. கோபாலகிருட்டிணன் (வெ.கரு. கோவலங்கண்ணன்), (19.03.2010) தல்வர், வணிக கல்விச் சாலை, சிங்கப்பூர்

குறிப்பு: இன்று கணிப்பொறியில் தமிழ் புழக்கத்திற்கு, எழுத்து மாற்றம் விரும்பும் அறிஞர்களை விட அயல்நாடுகளில் வாழும் தமிழ் மக்கள் பெரும் தொண்டாற்றியுள்ளனர். இவர்கள் வழிநின்று தாய் மொழியாம் தமிழை வளர்ப்போம்.

Monday, May 17, 2010

இசைத்தமிழ்த் தொன்மை



இசைத்தமிழ்த் தொன்மை
ஆரியர் வருமுன்பே, கி.மு.2000 ஆண்டுகட்கு முன்னரே. குமரி நாட்டில் நீடித்து வழங்கிய தலைச் சங்கத் தமிழ் முத்தமிழாயிருந்தது. தலைச்சங்கத் திறுதியில் செய்யப்பட்ட வழிநூலாகிய அகத்தியம் முத்தமிழிலக்கணம்.தமிழ் தோன்றி வளர்ந்தது.
பன்னூறாயிரம் ஆண்டுகள் நிலை பெற்றதும் மனிதன் தோன்றி யதும் நாலாயிரம் ஆண்டுகட்கு முன் தென்பெருங்கடலில் அமிழ்ந்து போனதுமான குமரிநாடே (Lemuria) யாதலின் தமிழே முதல் இசைமொழி. தமிழரின் இசையுணர்ச்சி தலையாயது. அதனாலேயே, இழவுக்கு அழுவதைக் கூட இசையோடு அழுவது தமிழ்ப்பெண்டிர் வழக்கம். தமிழர் இசையில் சிறந்தி ருந்ததினால்தான் இசையை மொழிப்பகுதியாக்கி இசைத் தமிழ் என்றனர். அதோடு நில்லாது. நாடகத்தையும் சேர்த்து முத்தமிழ் என வழங்கினர். இயற்றமி ழின்றி இசைத்தமிழில்லை; இயற்றமிழும் இசைத் தமிழுமின்றி நாடகத்தமிழுமில்லை. ஆகவே, இயலிசை நாடகம் மூன்றும் முறையே ஒரு தமிழும் இருதமிழும் முத்தமிழுமாகும். இங்ஙனம் இசை நாடகக் கலைகளை மொழிப்பகுதியாக்கினது வேறெந் நாட்டிலுமில்லை. இசை யென்னும் தனிச் சொல் முதலாவது இசுவென்று (hissing) ஒலிக்கும் இயல்பான ஓசையைக் குறித்து, பின்பு இனிய ஓசை யாகிய பண்ணைக் குறித்தது. இணைத்தலைக் குறிக்கும் இசை என்னும் சொல்வேறு. வடமொழி யில் கீதம் (பாட்டு) என்னும் பெயர் சம் என்னும் முன்னொட்டுப் பெற்றுச் சங்கீதம் என்றாகி இசைக் கலையைக் குறித்தது. இதனால், இசைத்தமிழ் முந்தின தென்றும் இயல்பானதென்றும் அறியலாம். இசைத்தமிழ் பற்றிய தொல் காப்பியச் சான்றுகள் அளபிறந்துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்உளவென மொழிப இசையோடு சிவணியநரம்பின் மறைய என்மனார் புலவர். (எழுத்து. 33) தெய்வம் உணாவே மாமரம் புட்பறைசெய்தி யாழின் பகுதியொடு தொகைஇஅவ்வகை பிறவும் கருவென மொழிப. (அகத். 20). துறையமை நல்யாழ்த் துணைமையோர் இயல்பே (களவு. 1) பாணன் பாடினி இளையர் விருந்தினர்கூத்தர் விறலியர் அறிவர் கண்டோர் (கற்பு. 52) பாட்டின் இயல பண்ணத்தி யியல்பே (செய். 173) தொல்காப்பியம் இடைச்சங்க நூல். இதன் காலம் கி.மு.2000. இஃது ஒரு வழிநூலாதலின் இதிற் கூறப்பட்டுள்ளவை யெல்லாம் தலைச்சங்க நூல்களிற் கூறப்பட்டவையே.



இசைத்தமிழ்த் தேர்ச்சி இசைக் குரியவை சுரம், பண், தாளம், பாட்டு, கருவி என ஐந்து. அவற்றுள் சுரம் ஏழு. அவற்றின் பெயர் குரல், துத்தம், கைக் கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பன. அவற்றை இசைமுறை யிற் பயிலும்போது, முற்காலத்தில் ஆ ஈ ஊ ஏ ஐ ஓ ஒள என்னும் ஏழ் நெடில்களாலும். பிற்காலத்தில் ச ரி க ம ப த நி என்னும் எழுத்துகளாலும் குறித்தார்கள். எழுசுரத்தின் ஏற்ற முறைக்கு ஆரோசை என்றும், இறக்க முறைக்கு அமரோசை என்றும் பெயர். ச ப வொழிந்த மற்ற ஐஞ்சுரங்களும் அரைச்சுரம் முழுச் சுரம் எனத் தனித்தனி இரு நிலைய. அரைச் சுரத்திற்கு ஆகணம் என்றும் முழுச் சுரத்திற்கு அந்திரம் என்றும் பெயர். எழுசுரக் கோவைக்கு நிலை என்று பெயர். மக்கள் பாட இயலும் 3 நிலை கட்கும் முறையே மெலிவு, சமன், வலிவு என்பன பெயராகும். பண்கள், பண் (7 சுரம்). பண்ணியம் (6 சுரம்), திறம் (5 சுரம்), திறத்திறம் (4 சுரம்) என நாற்றிறத்தின. பெரும்பண்கள் மருதம், குறிஞ்சி, செவ்வழி, பாலை என நான்கு. இவற்றுள். ஒவ் வொன்றும் அகநிலை, புறநிலை, அருகியல். பெருகியல் என நந்நான்கு வேறுபாடுடையது. பண்களைப் பிறப்பிக்கும் முறை, ஆயப்பாலை, வட்டப் பாலை, முக்கோணப்பாலை, நாற் கோணப்பாலை என நால்வகைத்து. பண்களின் பெயர்களெல்லாம். குறிஞ்சி. நாட்டை, கொல்லி, தக்கேசி, யாழ்முறி, நேரிசை, செந்துருத்தி, செவ்வழி, புறநீர்மை எனத் தமிழ்ச்சொற்களாகவே யிருந்தன. பிங்கல நிகண்டில் 103 பண்கள் கூறப்பட்டுள. “நரப்படைவா னுரைக்கப்பட்ட பதினோராயிரத்துத் தொள்ளா யிரத்துத் தொண்ணூற் றொன்றாகிய ஆதியிசைகள்” என்று அடியார்க்கு நல்லார் கூறுவதால் (சிலப்.ப.109) பண்டைத் தமிழிசையின் பரப்பை உணரலாம். தாளம் கொட்டு, அசை, தூக்கு, அளவு என நான்கு உறுப்புகளையுடையது. தாளத்திற்குப் பாணி யென்றும் பெயர். “அரை மாத்திரையுடைய ஏகதாளம் முதல் 16 மாத்திரையுடைய பார்வதிலோசனம் ஈறாக 41 தாளம் புறக்கூத்திற்குரிய” என்று அடியார்க்குநல்லார் கூறுகிறார். இக் கூத்திலுள்ள தாளப் பெயர்கள் தமிழ்ப் பெயர்க்குப் பதிலாய்ப் புகுத்தப்பட்ட வடமொழிப் பெயர்கள். இசைப்பாட்டுகள் தலைச்சங்க காலத்திலும் இடைச் சங்க காலத்திலும் எண்ணிறந் திருந்தன. அவை யாவும் இறந்தொழிந்தன. கடைச்சங்க நூல்களில் ஒன்றான பரிபாடல் இசைத் தமிழிலக்கியமே. கருவிகள், தோற்கருவி, துளைக்கருவி, நரப்புக்கருவி, தாளக் கருவி (கஞ்சக்கருவி) என நான்கு. அவற்றுள், தோற்கருவிகள் “பேரிகை படகம் இடக்கை உடுக்கை மத்தளம் சல்லிகை கரடிகை திமிலை குடமுழா தக்கை கணப்பறை தமருகம் தண்ணுமை தடாரி அந்தரி முழவு மதி(சந்திர) வளையம் மொந்தை முரசு கண்விடு தூம்பு நிசாளம் துடுமை சிறுபறை அடக்கம் தகுணிச்சம் விரலேறு பாகம் துணையுறுப்பு (உபாங்கம்) நாழிகைப் பறை துடி பெரும்பறை” முதலியவாகப் பல்வகைய. இவை, அகமுழவு அகப்புறமுழவு புறமுழவு புறப்புறமுழவு பண்ணமை முழவு நாண்முழவு காலை முழவு என எழுவகைப்படும்: மீண்டும், பாட்டுறுப்பு (கீதாங்கம்), கூத்துறுப்பு (நிருத்தாங்கம்), பொது வுறுப்பு (உபயாங்கம்) என மூவகைப்படும். துளைக்கருவி புல்லாங்குழல் நாகசுரம் முதலியன. நரம்புக்கருவி பல்வகைத்து அவற்றுள், பேரியாழ் (21 நரம்பு), மகரயாழ் (19 நரம்பு), சகோடயாழ் (14 நரம்பு), செங்கோட்டுயாழ் (7 நரம்பு) என்பன பெருவழக்கானவை. இவற்றுள் செங்கோட்டியாழே இது போதுள்ள வீணை. நரப்புக் கருவிகட்கெல்லாம் யாழ் என்பது பொதுப்பெயர், வீணை என்னும் பெயர் பிற்காலத்தது, பழமலை (முதுகுன்றம்), மறைக்காடு முதலிய தமிழகத்தூர்ப் பெயர்கட்குப் பதிலாக விருத்தாசலம் வேதாரணியம் முதலிய வடமொழிப் பெயர்கள் வழங்குவது போன்றே, யாழ் என்னும் தமிழ்ச் சொற்குப் பதிலாக வீணை என்னும் வடசொல் வழங்கி வருகின்றது.




யாழ்கள் செங்கோடு (சிவப்புத் தண்டி), கருங்கோடு (கறுப்புத் தண்டி) என இருநிறத்தண்டிகளை யுடையவையா யிருந்தன. செங்கோட்டை யுடைய யாழ் செங்கோட்டியாழ், “கருங் கோட்டுச் சீறியாழ்” எனப் புறப்பாட்டில் வருதல் காண்க. ஆங்கிலத்தில் குனைனடந எனப்படும் கின்னரி தமிழகத்தினின்று மேனாட்டிற்குச் சென்றதே. இதை மேனாட்டாரும் ஒப்புக்கொள் கின்றனர். இஃது இராவணனால் மிகுதியாய்ப் பயிலப்பட்டதென்றும், அதனால் இராவணா சுரம் எனப்பட்டதென்றும் ஆராய்ச்சி யாளர் கூறுகின்றனர். சிலர் மிடற்றையுங் கருவியாகக் கொண்டு கருவி ஐந்தென்பர். மிடறு=தொண்டை, வாய்ப்பாட்டுக் கருவி.




மேற்கூறிய கருவிகளையெல்லாம் தொன்றுதொட்டுச் செய்து வந்தவரும் இயக்கி வந்தவரும் தனித் தமிழரே. அவர் பாணர், மேளக்காரர் (நட்டுவர்) என இரு வகுப்பினர். இசைத் தெய்வத் திற்கே மாதங்கி (பாடினி) என்றுதான் பெயர்.ஆரியப் பார்ப்பனர் ஆலாபன இசை அறியாமைபிராமணர் இசை பயிலக் கூடாதென்று பண்டு ஒரு விலக்கிருந் தது. மனுதர்ம சாத்திரம் 4ஆம் அத்தி யாயம் 15ஆம் விதியில், “பிராமணர் பாட்டுப் பாடுவது கூத்தாடுவது... இப்படிக் கொத்த சாத்திர விருத்தமான கருத்தினால் பொருளைத் தேடிக்கொள்ளக் கூடாது” என்று கூறப்பட்டுள்ளது. ஒவ்வொரு நாட்டிலும் வழிபாட்டு மந்திரம் இசையோடு பாடப்படுவதே. ஆனால் அஃது ஆலாபன இசையன்று. வடமொழி வேதமந்திரங்கள் இப்போது கூட ஆலாபித்துப் பாடப்படு வதில்லை. உதாத்தம் அனுதாத்தம் சுவரிதம் என்னும் ஒலிப்பு வேறுபாடும் மாத்திரைக் கணக்கும் வேதமந்திரத்திற்கு மிகக் கண்டிப்பானவை. ஓர் எழுத்துத் தவறாக ஒலிக்கப் படினும் மந்திரத்தின் வலி குன்றிவிடுவதுடன் ஓதின வனுக்குப் பெருங்கேடும் விளையும் என்பது வடமொழியாளர் கொள்கை. ஆதலால், காட்டாளத்தி பண்ணாளத்தி நிறவாளத்தி ஆகிய மூவகை ஆலாபனையும் வடமொழி மந்திரத்திற்கில்லை என்பது தெளிவு.வேதத்தை ஓதாது வரிப்பாட்டைப் பாடி வேதவொழுக்கத்தி னின்று தவறியதால், சில ஆரியப்பார்ப்பனர் விலக்கப்பட்டு ஓர் ஊருக்கு வெளியே போய்க் குடியிருந்தனர் என்னும் செய்தி சிலப்பதிகாரத்தில் (புறஞ்சேரி. 35,39) கூறப்பட்டுள்ளது. பண்டைத் தமிழ்நாட்டில் இசைத்தமிழைச் சிறப்பாய் வளர்த்து வந்தவர் பறையருள் ஒரு பிரிவினரான பாணரே. இதனாலேயே “பாண் சேரிப் பற்கிளக்கு மாறு” என்னும் பழ மொழியும் எழுந்தது. பாணபத்திரர், திருநீலகண்ட யாழ்ப்பாணர். திருப்பாணாழ் வார் முதலிய யாழ்வேந்தரெல்லாம் பாணரே. 11ஆம் நூற்றாண்டில் தேவாரத் திற்கு இசை வகுத்தது திருநீல கண்ட யாழ்ப்பாணரின் மரபினரான ஒரு பெண்டாவர். தொல்காப்பியர் காலத்திற்கு முன்னிருந்து வழங்கிவரும் பாணாற்றுப் படை கூத்தராற்றுப் படை முதலிய செய்யுள்களும் நூல்களும் பாணரின் இசைத் தலைமையைப் புலப்படுத்தும். ஆரியப் பார்ப்பனர் தமிழ் நாட்டிற்கு வந்த பின்பே வடமொழி யில் இசைநூல்கள் எழுந்தன. அவர்கள் தமிழ்நாட்டில் வதிந்து பல தலைமுறையாக இசை பயின்றதினாலேயே தியாகராச ஐயர் தலைசிறந்த இசைப்புலமை வாய்க்கப் பெற்றனர் என்பதையும், அவருக்கும் தீட்சிதர்க்கும் முன்பே முத்துத்தாண்டவர் அரிய தமிழ்க் கீர்த்தனைகள் பாடியிருந்தனர் என்பதையும், அவரைப் பின்பற்றியே ஐயரும் தீட்சிதரும் பாடினர் என்பதையும், அவர்கள் தமக்கிருந்த அளவிறந்த வடமொழிப் பற்றினாலேயே திரவிட மொழிகட்குள் மிகுந்த வடமொழித் தொடர்புள்ள தெலுங்கிலும் வடமொழியிலும் கீர்த்தனையியற்றினார் என்ப தையும் அறிதல் வேண்டும்.இசைத்தமிழ் கெட்ட வகைபாட்டுத்தொழிலால் மதிப்பு, பெருவருவாய், மக்களை வயப்படுத் தல் முதலிய பயன்களைக் கண்ட ஆரியப் பார்ப்பனர் பிற்காலத்தில் அத்துறையில் இறங்கிப் பிறப்பால் உயர்வு தாழ்வு வகுக்கும் குலமுறையமைப்பினால் பாணர்க்குப் பிழைப்பில்லாது செய்து விட்டனர். அவர் தம்மை நிலத்தேவர் (பூசுரர்) என்று தமிழரை யேமாற்றி ஒவ்வொரு துறையிலும் முதலிடமும் முழுவிடமும் பெற்றனர். முத்தமிழ் முடிவேந்தரிடத்தும் எச்சமயத்திலும் அறிவிப்பில்லா மலே செல்லக்கூடிய பாணர் மரபினர் பார்ப்பனத் தெருவிலும் பொதுச் சாலையிலும் நடக்கவும் விடப்பட்டிலர்.




இசைத்தமிழ் இடைக்காலத்தில் மறைந்துபோனமைக்கு இதுவே பெருங் காரணம். இசைத்தமிழ் நூல்கள் படிப்பாரற்று எரிக்கும் சிதலுக்கும் இரை யாயின. இதுபோதும் பார்ப்பனர் பார்ப்பன இசைவாணரையே போற்றிப் புகழ்வதும் தமிழ் இசைவாணரைத் தூற்றியிகழ்வதும் வழக்கமாயிருந்து வருகிறது. அவர் பார்ப்பன இசைவாணரின் அரங்கு எவ்வளவு இன்பமற்றி ருப்பினும் இறுதி வரையிருந்து தலையாட்டியும் கைதட்டியும் பாராட்டுவதும், நாலுபக்கமும் கூலியாள்களை யிருத்திப் பாராட்டுவிப்பதும், செய்தித்தாள் கட்குச் சிறப்பித்தெழுதி விளம்பரஞ் செய்வதும். தமிழ் இசைவாணரின் அரங்கு எவ்வளவு இன்பமுற்றிருப்பினும் முகத்தில் ஈயாடாமல் சிறிது நேரம் இருந்துவிட்டு இடையில் ஒவ்வொருவராய் எழுந்துபோய்விடுவதும் இன்றும் கண் கூடாகக் காண்கின்றோம். வாய்ப்பாட்டிற்கு நயினாப்பிள்ளையும், கின்னரி (பிடிலு)க்குக் கோவிந்தசாமிப் பிள்ளையும், மிருதங்கத்திற்கு அழகநம்பியும். டோலக்கிற்கு வேணுசெட்டியாரும். சிஞ்சிரி (கஞ்சிரா)க்குத் தட்சிணாமூர்த்திப் பிள்ளையும் குணக் குரலுக்குப் (கொனுக் கோல்) பக்கிரிசாமிப் பிள்ளையும் நாகசுரத்திற்குப் பொன்னுசாமிப் பிள்ளையும் வெண்பாவிற்குப் புகழேந்தி போல் தத்தம் துறையில் தனியாற்றல் படைத்த எத்துணை ஒப்புயர்வற்ற வல்லுநர்! ஆயினும், தக்க அளவு அவர்கள் போற்றப்படவில்லை. தமிழர் அயலாரைப் போற்றித் தம்மவரைப் புறக்கணித்ததினால். தமிழ் இசை வாணர்க்குப் பெரும்பாலும் இசையரங்குகளில் இடமில்லாது போயிற்று. இதனால், தமிழும் தமிழரும் ஒருங்கு கெட்டனர். இன்று வானொலி நிலையங்களில் கூடத் தமிழ் இசைவாணர்க்குப் போதுமான இடமளிக்கப் படுவதில்லையென்று எங்கும் முறையீடும் கூக்குரலுமாயிருக்கின்றது. நூற்றுக்குத் தொண்ணூற் றெழுவரான தமிழர் இங்ஙனம் தம் உரிமையும் மானமுமிழந்து எருமையினும் உணர்ச்சியற்று. இவ்விருபதாம் நூற்றாண்டில் கூலத்திற்குச் செலவும் ஞாலத்திற்குப் பொறையு மாயிருப்பது எற்றுக்கோ?அழிந்துபோன இசை நாடக நூல்கள்அகத்தியம் (முத்தமிழ் நூல்), பரிபாடல் (தலைச்சங்க இலக்கியம்), பெருநாரை, பெருங்குருகு, இசைநுணுக்கம், வரி, சிற்றிசை, பேரிசை, இந்திரகாளியம், தாளசமுத்திரம், தாளவகை யோத்து, சச்சபுட வெண்பா, பஞ்சமரபு, பஞ்ச பாரதீயம் முதலிய பண்டை இசைத்தமிழ் நூல்களும்: முறுவல், குணநூல், சயந்தம், செயிற் றியம், கூத்தநூல், மதிவாணனார் நாடகத்தமிழ் நூல், விளக்கத்தார் கூத்து (இலக்கியம்), சுத்தா னந்தப் பிரகாசம், பரதம், பரத சேனாபதியம் முதலிய பண்டை நாடகத்தமிழ் நூல்களும் அந்தோ! அயலார் சூழ்ச்சியால் மீட்பற இறந்தொழிந்தன. இப்போதுள்ள இசைத்தமிழ் இலக்கியம்பரிபாடல், தேவாரம், நாலாயிரத் தெய்வப் பனுவல், திருப்புகழ், தேவபாணி, வரிப்பாடல், குரவைப்பாடல், முத்துத்தாண்டவர் வேதநாயகம் பிள்ளை முதலியோர் கீர்த்தனைகள், சீகாழி அருணாசலக் கவிராயர் இராம நாடகக் கீர்த்தனை, கோபால கிருட்டிண பாரதியார் நந்தனார் சரித்திரக் கீர்த்தனை. அண்ணா மலை ரெட்டியார் காவடிச் சிந்து. வழிநடைப் பதங்கள். நொண்டிச் சிந்துகள், தில்லானா, தென்பாங்கு முதலிய பல இசைத்தமிழ் இலக்கியங்களும் பாடல்களும் இதுபோது தமிழிலுள்ளன. இன்னும் வேண்டிய வகைகளெல்லாம் வேண்டியவாறே தமிழில் ஆக்கிக் கொள்ளலாம்; இன்று ஆக்கப்பட்டும் வருகின்றன.இசைக்கு மொழிவரையறை யுண்மை இசையானது ஒலிவடிவாய் வெளிப்படும் ஒருவனது மகிழ்ச்சிப் பெருக்கம். அம் மகிழ்ச்சியைத் தன் தாய்மொழிச் சொற்களால் அறிவிக்கின்றான் நாகரிக மாந்தன். ஊமையரும் விலங்கும் பறவைகளும் பேச்சின்மையால் ஒலிவடிவாய் மட்டும் மகிழ்ச்சியைக் காட்ட முடியும். ஒருவனது இசை கருத்தோடு கூடியிருப்பின், அஃது உணர்ச்சி யுள்ளதும் உண்மையானதும் உயர்ந்ததுமாயிருக்கும். ஒருவரது கருத்து, தாய் மொழியிற் போல வேறெம் மொழியிலும் சிறக்க வெளிப்படாது. அறியாத மொழியாயின் வெளிப்படுத்தவே முடியாது. மனிதனின் சிறந்த பேறுகளில் ஒன்றானதும் அவனை உயர்திணைப்படுத்துவதும் மொழியாம். அதை அவன் பயன்படுத்தாவிடின் கடைப்பட்ட அறிவிலியும் அஃறிணையுமாகின்றான். இசை ஒருவரது உள்ளத்தை உருக்கும் தன்மை வாய்ந்ததாதலின். அதைக் கடவுள் வழிபாட்டிற்கும் ஊடல் தீர்ப்பிற்கும் தொன்று தொட்டுப் பயன்படுத்தி வருகின்றனர். விளங்காத மொழியில் கடவுளை வேண்டின் அஃது உளறுவது போல்வதோடு கடவுளைப் பகடிசெய்து பழிப்பதுமாகின்றது. இசையினால் பாடுவார்க்கு மட்டுமன்றிக் கேட்பார்க்கும் இன்பம் விளைகின்றது. விளங்கும் மொழியில் பாடினால்தான் கேட்பார்க்கும் இன்பம் விளையும். பருந்தும் நிழலும் போலப் பொருளும் பண்ணும் பொருந்தியிருக்கும் உயர்ந்த இசையைப் பண்பட்ட தமிழன்தான் நுகர முடியும்: அயலார் நுகர முடியாது. ஆகையால், அவர் அதைக் குறை கூறுவது பொருந்தாது. மேனாட்டிசைக்கு அராகம் (ஆளத்தி), தாளம், சுரம்பாடல் என்ற மூன்றுமில்லை; மெட்டுகள் தாமுண்டு. ஐரோப்பாவில் இத்தாலி, இசைக்குச் சிறந்தது. ஐரோப்பா முழுதும் வழங்குவது ரோம - கிரேக்க இசையே. அவ்விசையே பண்டைக் காலத்தில் இங்கிலாந் திற்குச் சென்றது. ஆங்கில இசைக் குறியீடுகளெல்லாம் இலத்தீன் - கிரேக்கச் சொற்களே.


எ-டு :

(music - Gk. mousike, gamut (Gk.), solo(It.), soprano (It.), chorus (L., Gk.), choir (F.,L.Gk.), Tune.tone, Gk.tonos.


இங்ஙனமிருந்தும் மெட்டு வேறுபாட்டிற்காக ஓரிரு செரு மானிய இத்தாலியப் பாட்டுகளைக் கேட்கிறார்களேயன்றி முற்றிலும் அயன்மொழிப் பாட்டைக் கேட்பதில்லை. ஆகையால், அயன்மொழிப் பாட்டைத் தழுவுமாறு பொருந்தாத ஆங்கில உவமங்கூறித் தமிழரை ஒருவர் ஏமாற்றப் பார்ப்பது தம் அறியாமையை வெளிப்படுத்துவதாகும். தெலுங்கர் வாளா (சும்மா) இருப்பவும். தெலுங்கறியாத, தமிழையே தாய்மொழி யாகக் கொண்ட ஒரு சிறு குழுவார் இசைத்தமிழை எதிர்த்துக் கூக்குரலிடுவது அவர்க்குத் தமிழ்மீதுள்ள நச்சுப் பகைமையை யன்றி வேறெதைக் காட்டுகின்றது! தமிழனாயிருந்தால் தமிழ்ப் பாட்டை வெறுக்கவும் முடியுமா?தீட்டிய மரத்தில் கூர்பார்த்தலும் கொல்லத் தெருவில் ஊசி விற்றலும்இந்து தேசத்து இசைக்கே இசைத்தமிழ்தான் அடிப்படை. முதலாவது இசைத்தமிழ் வடமொழியில் மொழிபெயர்க்கப் பட்டது. கேள்வியைச் ச்ருதி என்றும் நிலையை ஸ்தாய் என்றும் மொழிபெயர்த்தனர். பண்களுக்கெல்லாம் தமிழ்ப்பெயரை நீக்கி ஆரியப்பெயரை இட்டுத் தமிழ் நாட்டிலும் வழங்கச் செய்தனர். ராகம் என்பது அராகம் என்னும் தமிழ்ச் சொல்லின் திரிபு. ஒ.நோ : அரங்கன்-ரங்கன். சுரம் தாளம் பாணி என்பவையும் தமிழ்ச்சொற்களே. இந்துத் தானி இசை இசைத்தமிழின் திரிபே. அக்பர் அவைக் களத்தில் தென்னாட்டு இசைத் தமிழ்வாணரும் இருந்தனர். இந்துத்தானி இசையிலும் சுரம் தாளம் அராகம் என்பவற்றிற்குத் தென்னாட் டிசையில் இன்று வழங்கும் பெயர்களே வழங்கிவருகின்றன. கருநாடக இசை இசைத் தமிழே. புரந்தரதாஸ் என்பவர் கன்னடத்தில் சில கீர்த்தனைகள் இயற்றினார். மகமதியர் தென்னாட்டிற்கு வந்தபோது திரவிட நாட்டில் தமிழரசர் வலிகுன்றிக் கருநட மன்னர் தலைமையாயிருந்ததால், திரவிட நாட்டைக் கருநாடகம் (கர்நாட்டக்) என்றும் திரவிட இசையாகிய தமிழிசையைக் கருநாடக சங்கீதம் என்றும் அழைத்தனர். கருநாடகம் என்னும் சொல்லும் கருநடம் (கன்னடம்) என்னும் மொழியும் தமிழின் திரிபே. ஆகவே, இசைத்தமிழே உருமாறியும் குறியீடு மாறியும் இந்துத்தான் கருநாடக இசைகளென வழங்கி வருகின்றது. சிலபல புதுமெட்டுகள் கண்டுபிடிக்கப் பட்டதினால் அவை வேறிசையாகா. இடைக்காலத்தில் தமிழர் ஊக்கப் பட்டி ருப்பின் அவரும் புதுமெட்டுகள் கண்டுபிடித்திருப்பர். ஐயருக்கு முந்தின மெட்டுகளெல்லாம் தமிழ் மெட்டுகளே. இந்துத்தானியிசை கருநாடக இசை தெலுங்கிசை என்பவையெல்லாம் மொழியால் வேறுபட்டவையே யன்றி இசையால் வேறுபட்டவையல்ல. அவற்றை அவ்வம் மொழிப்பெயரால் இன்னின்ன பாட்டென்று சொல்லுதலேயன்றி இசையென்று அழைத்தல் தகாது. இசைத்தமிழ்க் கலையே மொழி வேறுபாட்டால் வெவ்வேறு பெயர் பெற்று வழங்கி வருகின்றதென்க. இசை வேறு; பாட்டு மொழி வேறு. மலையாளத்தில் சில பாட்டுகளிருப்பதால் மலையாள இசை என ஒன்று ஏற்படாது. ஆகவே, இதுபோது தமிழ்நாட்டிலுள்ள இசை, கலையால் தமிழும் மொழியால் பிறிதும் ஆகும் என்றறிந்து தீட்டிய மரத்திற் கூர்பாராமலும் கொல்லத் தெருவில் ஊசி விற்காமலும் இசைத்தமிழை ஆர்வத்துடன் தழுவுக.பண்என்னாம் பாடற் கியை பின்றேல் கண்என்னாம் கண்ணோட்டம் இல்லாத கண். (குறள்.573) (செ.செ.- நளி 1943)

Sunday, May 16, 2010

மொழிஞாயிறு பாவாணருக்கு மறைமலையடிகளார் வழங்கிய சான்றிதழ்




பண்டித ஞா. தேவநேயனார், பி.ஓ.எல். பொதுவாக மொழிநூல் ஆய்வு முறைகளைப் பின்பற்றித் தமிழ்ச்சொல் ஆராய்ச்சி பற்றி எழுதிய நூல்கள் தமிழ்மொழியின் நீண்டகாலத் தேவையினை நிறைவு செய்தன. தம்முடைய இளந்தைக் காலத் திலே தலைமைக் கண்காணியார் தவத்திரு திரஞ்சு (Trench) எழுதிய ‘சொல்லாராய்ச்சி’, பேராசிரியர் மாக்கசு முல்லர் எழு திய ‘மொழியறிவியல்’, பேராசிரியர் சாய்சு எழுதிய ‘ஒப்பியல் மொழிநூல்’ முதலிய ஆங்கிய நூல்களை யாமே பெருவிருப்புடன் படித்துக்கொண்டிருக்கும்போது அந்த முறையில் தமிழ்ச் சொற்களை ஆராய வேண்டுமென்று விரும்பினேம். தமிழ்ப் பேரறிஞர்கட்குப் புலப்படாமல் மறைந்துகிடந்த விரிவாகவும் வியப்பாகவுமுள்ள தமிழ்மொழியறிவுப் பரப்பு, பண்டாரகர் கால்டுவெல் எழுதிய ‘திராவிட மொழிகளின் ஒப்பியல் ஆய்வு’ நூலால் புலப்படலாயிற்று. எனினும் பண்டாரகர் கால்டுவெல், அறியப்படாத வட்டாரத்தில் செய்ததொரு முயற்சியாதலால் தமிழ்ச்சொற்களை யெல்லாம் விடாமல் நிறைவாக எடுத் தாராய்ந்துள்ளனர் என்று எதிர்பார்ப்பதற்கில்லை. இதுவே மொழியியலை ஆராய வேண்டுமென்று எம்மைத் தூண்டியது.


எனவே `ஞானசாகரம்’ (அறிவுக்கடல்) என்னும் எம்முடைய இதழின் முதல் தொகுதியில் அத் துறையில் ஒன்றிரண்டு கட்டுரைகளை எழுதி வெளியிட்டேம். ஆனால் அப்போது சமயம், மெய்ப்பொருளியல், இலக்கிய வரலாறு ஆகிய துறைகளில் எம்முடைய மொழியாராய்ச்சித் துறையில் தொடர்ந்து ஈடுபடக் கூடவில்லை. ஆயினும் தகுதியுடைய அறிஞர் யாராவது இத் துறையில் ஆராய்வதற்கு முன்வரக் கூடுமா என்று எதிர்பார்த்துக் கொண்டிருந்தேம். அப்போது யாழ்ப்பாணம் திருத்தந்தை ஞானப்பிரகாசர் தாம் எழுதிய மொழியியல் ஆராய்ச்சி நூலை எமக்கு அனுப்பிவைத்தார். அது ஓரளவு எமக்கு மனநிறைவு அளித்தது. எனினும் மொழியியல் ஆராய்ச்சித் துறை மிகவும் விரிவும் ஆழமுமுடையதாதலால் பழந்தமிழ் இலக்கியங்களைக் கற்று அவற்றைக் கொண்டு நன்குபுரிந்துகொள்ளும் வகையில் மேலும் மொழியியல் ஆராய்ச்சி நூல்கள் வெளிவருதல் வேண்டுமென்று கருதினேம். அந்த நேரத்தில் திரு. தேவநேயனார் யாம் எதிர்பார்த்ததை ஏறத்தாழ முற்றும் நிறைவேற்றியது கண்டு பெருமகிழ்வுற்றேம். அத் துறையில் அவர் மிகவும் உழைப்பெடுத்து ஆராய்ந்து எழுதி யிருப்பவற்றைத் தமிழ் அறிஞர்கள் நன்றாக நம்பலாம். சொல்லாராய்ச்சித் துறையில் திரு. தேவநேயனார் ஒப்பற்ற தனித் திறமையுடையவர் என்றும், அவருக்கு ஒப்பாக இருப்பவர் அருமையாகும் என்றும் யாம் உண்மையாகவே கருதுகின்றேம்.மேலும் திரு. தேவநேயனார் பதியச் சொல்லும் ஆசிரியரும் இன்புறுத்தும் சொற்பொழிவாளருமாவர். பல தமிழ்க் கழக ஆண்டு விழாக்களில் எமது தலைமையின்கீழ் அவர் சொற் பொழிவுகள் ஆற்றியுள்ளார். அவை கேட்டார்ப் பிணிக்குந் தகையவாய் அமைந்து அவையோரைக் கிளர்ச்சியுறச் செய்து மகிழ்ச்சிக் கடலில் ஆழ்த்தின. அவர் வருந்தியுழைத்து ஆராய்ச்சி செய்துவரும் அறிஞர் ஆதலால் அவரைப் பணியில் அமர்த்தும் எந்த நிலையத்துக்கும் அவரால் பேரும் புகழும் கிடைக்கப் பெறும் என்று யாம் முழு நம்பிக்கையோடு கூறுகின்றேம்.


-மறைமலையடிகள்